Friday, August 31, 2012

வேனல் விழா

வேனல் விழா
 
வசந்த மகட்கோர் வரவே பெனப்பொடி
வாரி இறைத்தாச்சு - வர்ணம்
தூறி நிறைச்சாச்சு - காற்றில்
அசைந்தசைந்தே அவை ஆயிரம் பூமத்தாப்(பு)
ஆட்சியும் உண்டாச்சு - பட்டாம்
பூச்சியும் கண்டாச்சு
 
காமனும் தன்வில்லைக் கைவிட்டுப் போகக்
ககனவில் ஈர்ப்பாச்சு - எழில்
மிகநவில் வார்ப்பாச்சு - கோடிப்
பூமன்னும் சித்திரப் பொன்மகரந்தமும்
பூக்கோலம் இட்டாச்சு - பனி
மாக்கோல மொட்டாச்சு
 
மூண்டெழும் வெள்ளலை மோதிக் கடலும்
முழக்கும் முரசாச்சு - தெம்போ(டு)
அழைக்கும் அரசாச்சு - காலம்
பூண்டெழும் மற்றொரு பூரிப்(பு) இது எனும்
பூரணம் இன்றாச்சு - இன்பத்
தோரணம் நன்றாச்சு
 
மரந்தளிரும் கிளி மாயமும் வான் திசை
மாறிய காடாச்சு - நிலா
ஏறிய மேடாச்சு - வாணி
சார்ந்தொளி நெஞ்சமும் சாந்தியும் அன்புமாய்ச்
சத்தியம் பூத்தாச்சு - அருள்
நித்தியம் கூத்தாச்சு
 
பூத்துப் பொலிந்திடப் பூரணி வாஎனப்
பூங்குயில் பாட்டாச்சு - அதோ
மாங்குயில் கேட்டாச்சு - கூட
வாழ்த்தும் வரவேற்பும் வைகறையாய் உஷை
வாசல் படைச்சாச்சு - நம்முள்
பூசல் உடைச்சாச்சு
 
பட்டபாட்டிற்குப் பணப்புதையல்போல்
பரிதியும் வந்தாச்சு - தனி
உறுதியும் தந்தாச்சு - இனி
விட்டது குளிரும் வெற்றி என்றே இள
வேனல் விழவாச்சு - யுக
மே, நல் உழவாச்சு

Thursday, August 30, 2012

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி
 
ஜிகுஜிகு வண்ணத்துப் பூச்சி - உன்
சிறகினில் எத்தனை வீச்சு
வெகுசுக மாய்ப்பறந்தாச்சு - உனை
விட்டதும் நல்லதாய்ப் போச்சு
 
அழகழ காயிரம் வண்ணம் - கொள்நீ
அங்கங்கு தாவிடும் எண்ணம்
பழகினதெங்கு? சொல் திண்ணம் - உன்போல்
பறந்திட ஆவல்மண் விண்ணும்
 
கொள்ளைவர் ணங்களைக் கொண்டே - உனைக்
கொழித்ததில் யாரின்பங்குண்டே?
அள்ளக் குறையாது கண்டே - மனம்
ஆசையில் போகுது வண்டே!
 
தகதகப் பூம்பொடித் தங்கம் - என
தான்மின்ன எத்தனை அங்கம்
மிகமிக மேனிகொள் எங்கும் - சுக
மெல்லிய ராகங்கள் பொங்கும்
 
சிறகென்ன சித்திரப் பட்டா? - இல்லை
செங்கீற்று மின்னலின் வெட்டா
பிறகென்ன மல்லிகை மொட்டா - அட
பிடிபடாச் சொல்லின் பகட்டா?
 
மலர்தொறும் சென்றுசென்றமர்ந்தும் - கொண்ட
மாயங்கள் தாம் மகரந்தம்
உலருமும் தே சிறகந்தம் - புள்ளி
ஓவியம் புனையுமோ வந்தும்?
 
தங்கக் கடத்தல்கள் தான்நீ - செய்யத்
தந்திரம் கற்றதுன் மேனி
அங்கங்(கு) அலைந்திடும் தேனீ - கூட
ஆவதில்லை உன்போல் கூனி
 
காதலி என்னவள் கன்னம் - எனக்
கனிந்துன் சிறகுகள் மின்னும்
ஆதலின் உன்னையே இன்னும் - தொடர்
ஆசைகள் என்னையே தின்னும்
 
பூவுக்குப் பூமெல்லத் தாவும் - துளிப்
போதிலும் உல்லாசம் தூவும்
வாழ்வுக்கு நீஎங்குலாவும் - தெய்வ
வரங்களைப் பெற்றனை யாவும்?
 
குங்குமம் மஞ்சள் குளித்துப் - பல
கோலங்கள் இன்னும் தெளித்துத்
துங்கமின் வெட்டும் துளிர்த்து - நீகொள்
துள்ளலும் ஏன்? சொல் களித்து
 
வாய்ப்புகள் எவ்வெவெர் வாழ்வும் - தொட்டு
வருவது போலெந்தப் பூவும்
மேய்ப்புகள் கொண்டிட மேவும் - விந்தை
மேன்மைஉன்பால் அன்றோ நீவும்
 
வசந்தமும் நின்வரவேற்கும் - சொர்க்க
வாசலும் நீவரப் பார்க்கும்
அசைந்தசைந் தேமது வார்க்கும் - மலர்
அணிக்கும்நின் மேல் அன்றோ நோக்கும்
 
சுறுசுறுப் புக்கோர் பொறுப்பே - உன்
சுறுசுறுப் பென்றும் சிறப்பே
மறுபிறப் புக்கோர் விருப்பே - எனில்
மகிழ்வதும் நான் உம் பிறப்பே
 
ஜிகுஜிகு வண்ணத்துப் பூச்சி - உன்பூஞ்
சிறகினில் எத்தனை வீச்சு!
வெகுசுக மாய்ப்பறந்தாச்சு - எல்லாம்
வேடிக்கை யாய்ச்சொல்லப் போச்சு

Wednesday, August 29, 2012

வானவில்

வானவில்
 
வானச் சாசனம்
வர்ணப் பாசனம்
வேனல் இயற்கையின்
விரிமயில் ஆசனம்
 
ஊஞ்சல் மோகனம்
ஓளிவில் வாகனம்
தீஞ்சொற் கவிதையின்
திசைமகள் சீதனம்
 
சொர்ண மாளிகை
சொர்க்கத் தூளிகை
வர்ணப் பீடமேல்
வான்மகள் ஆளுகை
 
நவமணிப் பட்டியல்
நளினமின் வெட்டியல்
குவைமணிச் சரடெனக்
கோத்தபொன் அட்டியல்
 
கதம்பத் தோரணம்
கவர்ச்சிப் பூரணம்
விதம்பல செய்திடும்
வேடிக்கை காரணம்
 
கற்பனை ஆலயம்
காவிய மாலயம்
சிற்பநல் ஓவியச்
சிந்துரச் சாலையும்
 
வரையாச் சித்திரம்
வசந்தன் கைத்திறம்
அரையாய் வளைந்தவில்
அம்பில்லை; பத்திரம்

Tuesday, August 28, 2012

கடல்

கடல்
 
ஒன்றன்பின் ஒன்(று) அலை ஓடும் - அதில்
உன்னத வெண்ணுரை ஆடும் - ஒளிக்
குன்றென வெள்ளியைக் கொண்டே உருக்கிய
கோலம்போல் அந்நுரைப் பாடும் - காணக் கூடும்
 
மீன்களும் ஆயிரம் மேவும் - தண்ணீர்
மீதொரு வேளையில் பாயும் - அவை
தான்கொத்திப் போகவே மீன்கொத்திப் புட்களும்
தந்திரமாய் அங்கே சாயும் - ஏமாந்(து) ஓயும்
 
கட்டு மரம் பல காணும் - அவை
காவியச் சித்திரம் பூணும் - இன்னும்
எட்டும் அலையெலாம் ஏறி இறங்கி
எழில்மகள் ஊஞ்சலாய்த் தோணும் - ஒரு கோணம்
 
பதுங்கிட மண்வளை பார்க்கும் - பின்னும்
பறித்த மணல்குழி சேர்க்கும் - தரை
ஒதுங்க அந்நண்டினம் ஊர்ந்து வருமுன்னே
ஓடிவரும் அலை தூர்க்கும் - தன்னுள் ஈர்க்கும்
 
கொத்தொடு முத்தம் கொழிக்கும் - எல்லாம்
கொண்டு நீராழம் ஒளிக்கும் - மிகப்
பித்தொடு பித்தாய்ப் பிதற்றிடுவார்போல்
பெருமூச்செறிந்து பழிக்கும் - தண்ணீர் தெளிக்கும்
 
பளபளக்கும் வைரப் பாலம் - இடா
பாற்கடல் காணிரோ மேலும் - அதில்
களைபெற ஞாயிறு கால் ஊன்றி ஏறவும்
கைதொழப்போம் இந்த ஞாலம் - தெய்வக் கோலம்

Monday, August 27, 2012

நீர்க்குமிழி

நீர்க்குமிழி
 
ஆறுவிடும் கண்ணீர்
அழுகைத் தொணதொணப்பு
மாறுபடும் அந்நீர்
மவுனமுணுமுணுப்பு
 
கார்த்திகைநீரோடை
காட்டும் அகல்விளக்கு
பார்த்துகையால் ஆடப்
பல்லாங்குழி அடுக்கு
 
துள்ளுபுனல் மீறித்
துவளுமலர் மொட்டு
கொள்ளைமகிழ் நீரின்
கோலப்பொடிப் பொட்டு
 
இளம்சிறுவர் ஆடி
எறிந்தரசகுண்டு
குளம்சிரிக்கப் பாடிக்
கொழிக்கும் இசைவண்டு
 
நீலமயில் தோகை
நீண்டவிழிச் சிமிட்டு
காலமெய்யை ஆக
காட்டும் கணநிமிட்டு
 
நீரினுள் ஓர் நாகம்
நெடுமூச்சேறி கொதிப்பு
ஊரிலுள்ளோர் தாகம்
உணர்த்துமறுபதிப்பு
 
தேன் எனவே ஓடித்
திளைக்கும் நுரை எறும்பு
மீன் அலைக்குள் ஊடி
மீட்டும் சிறு குறும்பு
 
நாணமிடும் ஓடை
நளினவிழி வெட்டு
பூணழகுக் கூடைப்
பூவின் செடித் தட்டு
 
குலை அறுந்து போன
கொடிமுந்திரித் திரட்டு
மலைஉருண்ட தான
மணிக்கம்பளப் பகட்டு
 
அருவிஜல தரங்கம்
அடுக்கும் சுரக்கொழிப்பு
மருவிமன அரங்கம்
மலரும் கிளிகிளுப்பு
 
நீர்த்தடத்தின் மீதே
நிமிரும் தலைச் சிட்டு
பார்த்திருக்கும் போதே
பதுங்கும் உடை பட்டு
 
மூழ்கியநீர்க் காக்கை
முட்டை அணிவகுப்பு
வாழ்க எனும் வாழ்க்கை
மறையும் உயிர்த் தொகுப்பு
 
நிலையாமை மேவி
நிலைத்த உயிர்ச்சான்று
கலையாய் என் பாவின்
கட்டியம் இஞ்ஞான்று
 
மீன்பிடிக்கும் வலையின்
மிதக்கும் கனமுடிப்பு
வான் உடுக்கள் தொலைஊர்
வலமோகனப் படைப்பு
 
திடீர்மழையால் வந்த
திகைப்புக் குறியீடு
அடைமழையால் இந்த
ஆணிமுத்துக் காடு

Sunday, August 26, 2012

புதுவெள்ளம்

புதுவெள்ளம்
 
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
பொங்கு திரை
நுங்கு நுரைப்
புனல் வழியும் வெள்ளம் - சுழன்(று)
அங்கு வளைச்
சங்கு களை
அலை அலையாய் அள்ளும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
குமிழி யோடும்
உமிழி இடக்
கொப்புளங்கள் நீந்தும்! - ஒளிச்
சிமிழி எனத்
தமிழர் மனைக்(கு)
ஒப்ப விளக்கேந்தும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
நன்செய் வளம்
புன்செய்க் களம்
நானிலமும் பாயும்! - மிக
அஞ்சி விட
மிஞ்சி நெடும்
ஆறு கடல் சாயும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!
 
அணை மதகும்
இணை மதகும்
அரிக்க இரைந்தோடும் - வெள்ளிப்
பணமும் நுரைக்
கணமும் ஒரு
பணயம் எறிந்தாடும்;
வெள்ளமோ வெள்ளம்! - புது
வெள்ளமோ வெள்ளம்!

Saturday, August 25, 2012

அருவி

அருவி
 
கழற்சிக் காயெனக்
கரைநீர்த் திவலைகள்
சுழற்சியாய் ஆடும்
சுந்தர நாட்டியம்
 
கோணமாய்ச் சார்த்திய
குன்றெனும் வீணைமேல்
பாண நதிமகள்
பண்ணும் ஆலாபனம்
 
சாரல் மலைகொளும்
சங்கீத மேடையில்
ஊரல் நதிகொளும்
ஊர்த்துவ தாண்டவம்
 
மலைமங்கையின்
மார்பக மெந்துகில்
நிலைமை நழுவி
நேர்புரள் காவியம்
 
வெள்ளி இழைகள்
விதம்விதம் கொழிக்கத்
துள்ளி அலைகள்
தொடரும் மாதவம்
 
வீழ்ச்சி என்றாலே
வெறுப்பவர் கூட
வீழ்ச்சி என்றாலே
விரும்பும் சாகசம்!

Friday, August 24, 2012

மழைப் பின்னல்

மழைப் பின்னல்
 
மின்னல் ஊசி
வானத் திலே
என்ன பண்ணுது? - அது
மேகப் பொத்தல்
அத்தனைக்கும்
தையல் பின்னுது!
 
வண்ணமழைக்
கம்பி இழை
என்னபண்ணுது? - அது
வானும் மண்ணும்
இணையச் சர
கூடம் பின்னுது!
 
கொட்டும் இடி
கொட்டமடித்(து)
என்னபண்ணுது? - அது
கும்மி அடித்
தோடி மரக்
கூந்தல் பின்னுது!
 
பொங்கி வரும்
நுங்கு வெள்ளம்
என்னபண்ணுது? - அது
புதுநுரையாய்
நாணிக்கோணிச்
சரிகை பின்னுது!
 
இத்தனையும்
பார்க்கப் பார்க்க
என்னபண்ணுது? - நெஞ்சில்
இயற்கை என்ற
வியக்கும் சக்தி
இன்பம் பின்னுது!

Thursday, August 23, 2012

கொடி மின்னல்

கொடி மின்னல்
 
இருட்டழகி கழுத்தேறி
இடிமுழக்கும் அவள்நடனப்
பொருட்டசைந்து பளபளக்கும்
பொற்சரடே! மின்னலடி!
 
கரியசுவர் மேலிருந்து
காற்றினுக்குத் தக்கபடிச்
சரிகை அலைந் தாடுமலர்ச்
சரக்கொடியோ மின்னலடி!
 
குகைச்சுரங்கம் திறந்தவுடன்
கொடிபறக்க ஓடியெங்கும்
தகைச்சுரங்கம் ஆனதங்கத்
தோரணமோ, மின்னலடி?
 
மழைநீரில் ஆடியவிண்
மங்கைதிசைக் கார்குழலில்
இழைநீவச் சிணுக்கெடுக்கும்
இங்கிதமோ, மின்னலடி?
 
மேகமடர் குகைவழியே
மெல்லஎட்டிப் பார்த்த மயில்
தோகைமடல் விரித்தபடித்
துள்ளுவதோ மின்னலடி?
 
நூல்வலைகள் தாம்விரித்தால்
நொடியில்விழா மீன்களென்று
வேல்வலைகள் தாம்விரித்த
விந்தைகளோ மின்னலடி?
 
எண்ணமிலாச் சிந்தையுள்ளும்
இப்படியே பற்பலவாம்
வண்ணமெலாம் கொண்டுவரும்
வான்கொடையோ மின்னலடி?

Wednesday, August 22, 2012

மயில்

மயில்
 
பதுக்க முடியாப்
பவுன் முத்திரைநீ!
ஒதுக்க முடியா
ஓவியத் திரைநீ!
 
நட்டுவம் இன்றி
நடத்தும் கலைநீ!
கொட்டு முழக்கின்றிக்
குதிக்கும் சிலைநீ!
 
உழைக்காப் புதுமை
உயிர்ப்(பு) அறுவடை நீ!
இழைக்கா இயற்கை
இலக்கியக் கொடைநீ!
 
நீலத் தோகையின்
நேர்துறை முகம்நீ!
கோலத் தனிஎழில்
கொட்டும் யுகம்நீ!
 
அழகு நடன
அரும்பத வுரைநீ!
மெழுகுப் பச்சையின்
மின்னலை நுரைநீ!
 
மழைக்காலத்தின்
மருமகப் பிள்ளைநீ!
திளைக்க மரகதம்
திரண்ட பொற்கிள்ளைநீ!
 
உயிராய்க் கிடைத்த
ஒளிப்புதையல்நீ!
அயராது மகிழ்வேன்
ஆடுக மயில்நீ!

Tuesday, August 21, 2012

பட்டாம் பூச்சி!

பட்டாம் பூச்சி!
 
பூப்பறிக்கப் போனேன்
பூபறந்து போச்சு!
போனவண்ணம் பார்த்தேன்
காணவண்ணப் பூச்சி!
 
படம் எழுதப் போனேன்
படம் எழுந்துப் போச்சு!
தடம் மருண்டு பார்த்தேன்!
தகத்தகாயப் பூச்சி!
 
மின்னல்கிள்ளப் போனேன்
மின்னல்துள்ளிப் போச்சு!
என்ன என்று பார்த்தேன்!
இந்திரவில் பூச்சி!
 
பட்டுகண்டு போனேன்
பட்டெனவே போச்சு!
தொட்டெடுக்கப் பார்த்தேன்
துளித்துளிபொன் பூச்சி!
 
சுடரணைக்கப் போனேன்
சுடர்தெறித்துப் போச்சு!
அட, வியந்து பார்த்தேன்
அடடா, பட்டாம் பூச்சி!

Monday, August 20, 2012

பத்தாம் பிறை

பத்தாம் பிறை
 
கூடைக்கு ளேசிறு
கூடை கவிழ்த்திய
கோலமே போன்ற நிலா - வெள்ளித்
தாலமே போன்ற நிலா - மலர்
மேடைக்கு மத்தியில்
மீதொளி ஆசன
மிட்டது போன்ற நிலா - முறத்
தட்டது போன்ற நிலா
 
அல்லிக் குளத்தின்
அரும்தா மரைஇதழ்
ஆடுதல் போன்ற நிலா - அன்னம்
ஓடுதல் போன்ற நிலா - கலா
வல்லிக்(கு) இயற்கையே
வாழ்த்திய ஆரத்தி
வட்டத்தைப் போன்ற நிலா - தெப்ப
மட்டத்தைப் போன்ற நிலா
 
சித்திர முத்தைச்
சிறப்பாய்க் கருக்கொளும்
சிப்பியைப் போன்ற நிலா - பட்டுத்
தொப்பியைப் போன்ற நிலா - மிகப்
பத்திர வேலைகொள்
பாங்குடன் தோன்றும்
பதக்கத்தைப் போன்ற நிலா - சிற்பச்
சதுக்கத்தைப் போன்ற நிலா
 
சீவிய தென்னையின்
செவ்விள நீர்க்காய்
தெரிவது போன்ற நிலா - துண்டாய்
விரிவது போன்ற நிலா - வண்ணம்
ஓவியம் தூரிகை
ஊன்றிக் குழைக்க
உறைமடல் போன்ற நிலா - பத்தாம்
பிறைமடல் தோன்றும் நிலா!

Sunday, August 19, 2012

ஏன் போனாள்?

ஏன் போனாள்?
 
கோலமிடப் புள்ளி இட்டுக்
கோடிழுக்கா முன்னம்
வாலைநிலாக் கிண்ணிவிட்டேன்
வஞ்ச இரா போனாள்?
 
மல்லிகைப்பூ குவியலிட்டு
மாலைகட்டா முன்னம்
மெல்லநிலாக் கூடைவிட்டேன்
மின்னல் இரா போனாள்?
 
தாதியரோ(டு) ஆட்டமிட்டுத்
தண்ணீர்கொளா முன்னம்
சோதிநிலாக் குடத்தைவிட்டேன்
சொக்கி இரா போனாள்?
 
அரங்கெனவே தோரணமிட்(டு)
ஆடவரா முன்னம்
மருங்கில்நிலா முரசைவிட்டேன்
மங்கை இரா போனாள்?
 
பெண்கள்புடை சூழவிட்டுப்
பேணிக்கொளா முன்னம்
கண்கொள்நிலாக் குழந்தைவிட்டேன்
கன்னி இரா போனாள்?
 
போனதென்ன காரணமோ?
புரியவில்லை யேனும்
வானவன் தன் காதலிக்கே
வாழ்த்துரைக்க லானேன்!

Saturday, August 18, 2012

தெய்வ தீபம்

தெய்வ தீபம்
 
நீண்டு சிவந்து நிமிர் மிளகாய் எனத்
தூண்ட எரியும் தூமணித் தீபம்!
 
சிவந்தும் மலராய்ச் செம்பருத்தியின்
குவிந்த மொட்டுபோல் கொழும்சுடர்த் தீபம்
 
பழுத்த மாதுளைப் பழமே தொங்கிடத்
திளைத்த காட்சிபோல் திகழ்வுறும் தீபம்
 
தாரை மழைநீர் தரைமேல் விழுகையில்
நேரும் குமிழ்போல் நிரம்பிடும் தீபம்
 
செக்கச் சிவந்து சிலிர்த்திடும் கோழியின்
தக்க கொண்டைபோல் தழல்பெறும் தீபம்
 
தாழப் பூத்தும் தழைக்கும் நாண
வாழைப் பூப்போல் வரிசைகொள் தீபம்
 
புதியது கண்ட அப் போதே விஞ்ஞானியின்
சுதி ஓலிக் கண்கள் போல் ஜொலித்திடும் தீபம்
 
காந்தள் விரல் எனும் கைவிளக்கேந்தியே
பூந்தண் அழகியர் புனைந்திடும் தீபம்
 
முத்து விளக்கிதழ் முறுவலில் ஏற்றுவோர்
குத்து விளக்கெனக் கொலுவிடும் தீபம்
 
குடும்ப விளக்கெனும் குல மடவார் கைப்
படும்பொன் விளக்கெனப் பளிச்சிடும் தீபம்
 
பனித்துளிக் காலைப் பரிசுக் கிரவெலாம்
தனித்துளித் துளியாய்த் தவம்செயும் தீபம்
 
இருளுக்கும் வான் உடு ஏற்றிடக் கண்டே
அருளுக்கு வையகம் ஆராட்டும் தீபம்

Friday, August 17, 2012

அந்தி வந்தது

அந்தி வந்தது
 
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
சிந்திச் சிந்தி இறைத்த பூக்கள்
சிற்பக் கோலம் பூண்டன - அந்தச்
சிதரில் ஒளிப் புதரில் மனம்
சென்று சென்று மீண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
குந்திக் குந்தி எழுந்த சிட்டுக்
குருவி மீண்டும் அமர்ந்தன - அவை
கொத்திக் கொத்தி விழுந்த நெல்லின்
குவியல் யாண்டும் சுமந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
துள்ளித் துள்ளி வெள்ளிக் கிண்ணம்
தொலைவில் எங்கும் உருண்டன - நிலாத்
துளிக ளென்னும் ஒளி அமுதச்
சுவையை மொண்டு புரண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
எள்ளி எள்ளி இறைத்த பொற்கா(சு)
எடுப்பார் இன்றிக் கிடந்தன - அவை
எண்ணி எண்ணி முடியு முன்னே
இரவுப் படை தொடர்ந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கோடி கோடிச் சிமிட்டல் கொண்டு
குறும்பு விழி பூத்தன - அந்தக்
குறும்பு விழிப் பார்வை எல்லாம்
நிரம்ப மணி கோத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
ஓடி ஓடி மின்மினிகள்
உயர உயர மொய்த்தன - அந்த
உப்பரிகைக் காடனைத்தும்
ஒளிச்சரிகை தைத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
புலர்ந்து புலர்ந்(து) உலைக்களத்தின்
பொரித்து கள்கள் தெறித்தன - அந்தப்
போர்க்களத்தில் மலைகளெல்லாம்
பூவாணமாய்ச் சிரித்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கலந்து கலந்(து) இருளும் ஒளியும்
கண்ணா மூச்சே ஆடினே - அந்தக்
கால முறை ஆடலுக்கும்
கவிதை வீச்சே கூடின
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி

Thursday, August 16, 2012

விடியல் வியப்புகள்

விடியல் வியப்புகள்
 
வசந்தங்கள் பூத்து வரிசை இடப் - பனி
வயிரங்கள் கோத்துத் தரிசைநட
அசைந்தெங்கும் நீள அவிநயமாம் - தென்றல்
அமரபூ பாளக் கவிநயமாம்
 
காலை அரும்புகள் கட்டியமாம் - அவை
காணச் சுரும்புகள் முட்டியும் ஆம்
கோல ரகசியம் கூறிடுமாம் - அதில்
கோடி அவசியம் தேறிடுமாம்
 
பொரிப்பொரிக் கிண்ணத்துப் பூச்சிகளாம் - அவை
பொடிப்பொடி வண்ணத்துக் காட்சிகளாம்
விரிப்பொடும் பூம்பொழில் விட்டில்களாம் - அந்த
வியப்புக்குக் காம்பெழில் கட்டில்களாம்
 
ஓடை அருவிகொள் உல்லாசம்தான் - அங்கே
ஒதுங்கும் குருவிகள் நல்வாசம்தான்
கூடை மலரும் கொலு எனலாம் - நிசிக்
கொத்தாய்ப் புலரும் நிலவெனலாம்
 
பின்னும் என்னென்ன பிதற்றல்களாம் - கிளிப்
பிள்ளைபோல் சொன்ன குதற்றல்களாம்
சொன்ன ஒவ்வொன்றும் புதுநலம்தான் - தெய்வ
சொர்க்கமாய் நின்ற குதூகலம்தான்

Wednesday, August 15, 2012

உதயம்

உதயம்
 
முன்னிருட் கங்குலில்
மின்னிய மீன்கணம்
முத்துப் பனியாச்சு - புல்மேல்
இறைத்த மணியாச்சு - வயசுக்
கன்னியும் செப்பொடு
தன் இல்லம் விட்(டு)ஆறு
காண நடந்தாச்சு - கன்னத்தில்
நாணம் படர்ந்தாச்சு
 
மேலை நெடுவானில்
கோல நிலாவட்டம்
மேனி வெளுப்பாச்சு - உயிரோ(டு)
ஊனில் களிப்பாச்சு - இளைய
காலை நளினிக்குக்
கட்டியம் கூறிப்பூங்
காவும் விழிப்பாச்சு - கண்முன்னம்
யாவும் செழிப்பாச்சு
 
ஓடை மதகுநீ
ரோ(டு)ஒளிச் செங்கதிர்
ஊடிச் சிலிர்த்தாச்சு - நுரைநுரை
ஆடிச் சலிச்சாச்சு - முகிலில்
மூட மிடும்பனிக்
கூடம் விலகிநம்
முற்றம் எழிலாச்சு - இயற்கையே
முற்றும் தொழிலாச்சு
 
மாடப் புறாவும்செங்
காடைப்புள்ளும் திசை
மாறிப் பறந்தாச்சு - சிவ்வென
ஏறி விரைந்தாச்சு - அதனைப்
பாடப்பா டப்புதுப்
பாங்கில்பண் ணோடும்
பரவசம் உண்டாச்சு - இறைவன்
அருள்வசம் கண்டாச்சு
 
பழனச் சதிர்கொள்
வளநெற் கதிர்களும்
பாரில் படிஞ்சாச்சு - துயரும்
ஊரில் விடிஞ்சாச்சு - வீட்டின்
இழைநறும் கோலம்
எலாம்பரங் கிப்பூ
இதயம் மலர்ந்தாச்சு - அடடே
உதயம் புலர்ந்தாச்சு

Tuesday, August 14, 2012

கதிர்மகள்

கதிர்மகள்
 
வண்ணக் குழம்போ?
வானப் பிழம்போ?
வருகுது பார், தம்பி - அது
சொர்ணக் குழம்பாய்ச்
சோதித் தழும்பாய்ச்
சுழலுது பார், எம்பி!
 
தங்கக் குடமோ?
தாமரைப் படமோ?
தழையுது பார், தம்பி - அது
பொங்கும் குடமாய்ப்
பூரிப் பிடமாய்ப்
பொலியுது பார், எம்பி!
 
வயிரமின் தட்டோ?
வார்கடல் திட்டோ?
வனப்(பு) அது பார், தம்பி -அது
இயற்கையின் தட்டாய்
எழில்மகள் பொட்டாய்
ஏறுது பார், எம்பி!
 
காலக் குளமோ?
ககனப் பழமோ?
கண்டவர் யார், தம்பி? - அது
மூலக் குளமாய்
முற்றும் வளமாய்
மூண்டது பார், எம்பி!
 
மண்ணுக் கரசோ?
மன்னர் முரசோ?
மருவுது பார், தம்பி! - அது
கண்ணுக் கரசாய்க்
கடவுட் பரிசாய்க்
காண்பதும் பார், எம்பி!
 
கங்குல் முடிவோ?
கவலை விடிவோ?
கதிர்முகம் பார், தம்பி - அது
மங்கலக் காலை
மணமகள் கோல
மகிழ்ச்சியு மாம், எம்பி!

Monday, August 13, 2012

எழிற்காலை

எழிற்காலை
 
இரவெலாம் வானம்
கருவுயிர்த் தீன்ற
இளம்சிசுக் காலை - தங்கப்
பழம்பசுங் காலை - அதன் ஒளி
முறுவலாம் தேனைப்
பெறஎலாம் விம்மின
மோகனச் சோலை - தெய்வம்
ஆகநல் வேலை
 
விரிகடல் எல்லாம்
சரிகைகள் பின்னி
விளையாடும் காலை - வர்ண
இழையோடும் காலை - அதன் தனி
மெருகோடும் கண்டேன்
சருகுகள் தாமுமே
மின்னிடும் லீலை - இளம்
பொன்னுடற் சேலை
 
கிளையெலாம் மேலும்
ஒளிமுலாம் கோலம்
கிறுக்கிடும் காலை - வியந்(து) அதன்
வழிநடந் தேக
நளினமாய்த் தென்றல்
வழிகாட்டும் சாலை - எல்லாம்
எழில்கூட்டும் காலை

Sunday, August 12, 2012

எழிலும் தொழிலும்

எழிலும் தொழிலும்
 
மின்னல் மரகத மேடையிலே - கதிர்ச்
செந்நெல் கரகம்முன் ஆடையிலே
முத்துப் பனித்துளி மொட்டுகள்நான் - வைர
வித்து மணித்துளிச் சொட்டுகள்நான்
 
உள்ளம் வெடித்த நிலங்களிலே - கண்ணீர்
வெள்ளம் வடித்த புலங்களிலே
உழைப்பவர் வேர்வை யுறுதுளிநான் - அங்குக்
களைப்பவர் ஜீவச் சிறுதுளிநான்
 
மஞ்சள் வெயில்வரும் மாலையிலே - கூடிக்
கொஞ்சும் குயில்வரும் வேளையிலே
மனம்முறிந் தோர்தம் மழைக்கண்ணீர்நான் - கூலி
தினமறிந் தோர்தம் பிழைக்கண்ணீர்நான்
 
அந்தர வான அடவியிலே - காயும்
சுந்தர சீனப் புடவையிலே
அள்ளி இறைத்த அழல்மலர்நான் - கோலப்
புள்ளி நிறைத்த தழல்மலர்நான்
 
எழிலென்றும் என்னை எழுதிடுவார் - அதன்
தொழிலென்றும் என்னைத் தொழுதிடுவார்
எழிலெனில் உள்ளேன்மெய் எண்ணத்திலே - அதன்
தொழிலெனில் உள்ளேன்கை வண்ணத்திலே

Saturday, August 11, 2012

கவிதை

கவிதை
 
கூளமாய்க் கலைந்த உட்
.. குரல்மனப் பூக்களை
மேளமாய்ப் புனைந்தஎன்
.. மெய்விரல் நாடகம்
 
என்னையே உருக்கி
.. இதயம்கொள் உணர்ச்சியில்
பொன்னையே பெருக்கும்
.. புதுச்சுடர் மந்திரம்
 
வாகனக் கற்பனை
.. வசந்த விழாக்களில்
மோகனச் சொற்கொளும்
.. மூர்த்திதன் ஊர்வலம்
 
நாக்குத் திரியில்
.. நர்த்தனம் ஆடி
வாக்குச் சுடர்தான்
.. வரையும் சாகசம்
 
மூளியாய்க் கிடந்தஎன்
.. மொழும்கல் மனத்தினை
காளியாய்ப் படைத்தொளி
.. காட்டிய தரிசனம்

Friday, August 10, 2012

கவிக்குருவி

கவிக்குருவி
 
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி - நான்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
கருவில் உருவாகிக்
கவித்திருவும் ஆகிப்
பெருவெளியின் மீதும்
பேரொளியைக் கோதும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
பரசிவமாம் வெள்ளம்
பாய்ந்துணர்வை அள்ளும்
வரசிவமாய் என்னை
வாழ்த்திடுவன் அன்னை
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
ஞானமென்ற நாழில்
நாதமென்ற பாழில்
ஊனமொன்று நீங்க
உயிர்ச்சிறகு தாங்கக்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
அந்தரத்துத் தென்னை
அயர்ந்து வரும் என்னை
வந்தமரச் சொல்லும்
வசைமனத்தைக் கொல்லும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
நெல்லழகு மூக்கும்
நிறைபுவனம் தூக்கும்,
சொல்லமுதக் காற்றில்
சோதிமுளைக் கீற்றில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
காலமென்றன் கருவி
கவிதை என்றன் அருவி
ஓலமென்ற மேட்டில்
ஒளிச்சருகுக் கூட்டில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி

Thursday, August 9, 2012

தழுவல்

தழுவல்
 
புல்லில் அரும்பி வந்தாள் - அழகி
பொட்டுத் துளியெனவே!
சொல்லில் தழுவுகிறேன்! - அவள்மேல்
சுடராய் இழைவதற்கே!
 
மெய்யில் விளையவந்தாள் - அழகி
மின்வேர்த் துளியெனவே!
உய்யத் தழுவுகிறேன்! - அவள்மேல்
உழைப்பாய் உயர்வதற்கே!
 
மொட்டில் சிரித்துவந்தாள் - அழகி
முத்துத் துளியெனவே!
கட்டித் தழுவுகிறேன்! - அவள்மேல்
காற்றாய் மிதப்பதற்கே!
 
விண்ணில் உருகிவந்தாள் - அழகி
விரிநுண் துளியெனவே!
மண்ணில் தழுவுகிறேன்! - அவள்மேல்
மடையாய்ச் சிரிப்பதற்கே!
 
நெஞ்சில் நெகிழ்ந்துவந்தாள் - அழகி
நினைவுத் துளியெனவே!
செஞ்சொல் தழுவுகிறேன்! - அவள்மேல்
சிந்தனை ஆவதற்கே!
 
எண்ணும் வியப்பனைத்து - அழகி
இமைத்தாள் துளியெனவே!
கண்ணுள் தழுவுகிறேன்! - அவளே
காவிய அகண்டமென்றே!

Wednesday, August 8, 2012

பயணம்

பயணம்
 
நெஞ்சின் நிழலில்
.. நீள நடந்தேன்
செஞ்சொற் கழலில்
.. சிகரம் அடைந்தேன்
 
கேட்ட இடத்தில்
.. கிளர்ச்சி ஆனேன்
பாட்டுத் தடத்தில்
.. பயணம் போனேன்
 
வாழ்க்கைக் குகையுள்
.. வசந்தம் சொரிந்தேன்
வேட்கைப் பகையுள்
.. விதிமேல் சரிந்தேன்
 
இரவின் அகலில்
.. இளமை வரைந்தேன்
பரவும் பகலில்
.. பசிமேல் கரைந்தேன்
 
அழகின் மயக்கில்
.. அமுதம் குடித்தேன்
பழகி வியக்கும்
.. பழைமை முடித்தேன்
 
சிந்தை முகட்டில்
.. சிறிதே களைத்தேன்
சந்தைப் பகட்டில்
.. சரிதம் வளைத்தேன்
 
சொல்லின் அசுவம்
.. சொடுக்கிமுன் விட்டேன்
புல்லின் விசுவப்
.. புதிரையே தொட்டேன்

Tuesday, August 7, 2012

வேண்டுகோள்

வேண்டுகோள்
 
புதிய எண்ணங்கள்
புதிய வண்ணங்கள்
புதுவெள் ளம்போல்
பெருகவிடு - அதில்
விதியின் சிந்தைகள்
விளைக்கும் நிந்தைகள்
விடுத்தின் பங்கள்
பருகவிடு
 
வாழும் நம்பிக்கை
வளர்க்கும் அன்புக்கை
வழிகோத் தென்னை
நடக்கவிடு - அதில்
தோளும் தோளுமாய்த்
தொடரச் சூழுமாய்த்
துயரம் கொன்று
துடைக்கவிடு
 
சிந்தை வேகங்கள்
செயல்வி வேகங்கள்
செறிய மேலும்
வளர்ச்சிகொடு - அதில்
முந்தை மூடங்கள்
முனைந்த வேடங்கள்
முழுதும் சாய
எழுச்சிகொடு
 
இதயம் கோருமாய்
இறைஞ்ச வேறுமாய்
இருப்ப தென்ன,
மனிதனொடு? - அவன்
கதையும் மானிடக்
கவிதை தானிடக்
கனிந்தெம் தாயே
புனிதம்கொடு

Monday, August 6, 2012

கவிஞன் நான்!

கவிஞன் நான்!
 
அற்பு தத்தின்
சொற் பதத்தில்
.. அந்த ரங்க
.. சந்தம் பொங்க
.. ஆடுவேன் - கவி
.. பாடுவேன்.
 
எண்ணம் என்னும்
வண்ணம் மின்ன
.. எக்க ளிப்பின்
.. முக்கு ளிப்பில்
.. ஏறுவேன் - விதி
.. மீறுவேன்
 
மண்ட லத்துச்
செண்டெ டுத்து
.. மையம் பற்றி
.. வையம் சுற்றி
.. மாட்டுவேன் - திறம்
.. காட்டுவேன்
 
காலம் என்ற
ஞால மன்றில்
.. காட்சி யாவும்
.. சாட்சி மேவக்
.. காணுவேன் - வெற்றி
.. பூணுவேன்
 
திங்க ளோடு
தங்க ஊடு
.. தேனி லாவின்
.. வானில் மேவித்
.. தேறுவேன் - இளைப்
.. பாறுவேன்
 
சுந்த ரத்தின்
அந்த ரத்தில்
.. சொக்கும் காதல்
.. மிக்கும் போதை
.. சூழுவேன் - என்றும்
.. வாழுவேன்
 
நாவி யெங்கும்
காவி யங்கள்
.. நவ நிலத்தின்
.. பவனி வைத்தும்
.. நல்குவேன் - பொய்ம்மை
.. வெல்குவேன்
 
பாட்டு வீணை
மீட்டும் ஆணைப்
.. பரவ சத்தின்
.. அருள்வ சத்தில்
.. பாய்குவேன் - சிவம்
.. தோய்குவேன்
 
வாணி அன்னை
பேணி என்னை
.. வைக்கும் அன்பில்
.. மொய்க்கும் இன்பம்
.. வைகுவேன்  - யுகம்
.. செய்குவேன்
 
தீஞ்சொல் தானும்
ஊஞ்சல் ஆன
.. தெய்வம் நேரில்
.. கைவந் தூறத்
.. தேவையே - என்றன்
.. சேவையே

Sunday, August 5, 2012

ஒளியைத் தேடி

ஒளியைத் தேடி
 
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
.. வழியை நாடி விரைகின்றேன்
.. வாழ்வில் கூடிக் கரைகின்றேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
பொழுதுத் துளியும் யாழாகப்
புலரி வெளியும் பாழாக
.. அழுதும் அதற்கே மாறாக
.. அருணோ தயத்தின் வேராக
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
இதய மூலை ஆய்ந்திட்டேன்
எண்ணச் சோலை பாய்ந்திட்டேன்
.. உதய காலை புகுந்திட்டேன்
.. ஓகோ பொய்தான் மிகுந்திட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
நம்பிக் கையே அகலாக்கி
நாளும் அதையே புகலாக்கி
.. அன்பு மனமும் திரிகொண்டே
.. அதற்கும் மேலோர் நெறிகண்டே
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
முடியா நீண்ட பயணம்தான்
முனைப்பே தூண்டும் அயனம்தான்
.. மடியாய் அதற்கே மயங்கவில்லை
.. மனம்தான் சிறகு; தயங்கவில்லை
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
புதிய யுகத்தின் விடிவொன்று
புகையும் அகத்தின் முடிவென்று
.. எதிலும் துணிச்சல் வரப்பெற்றேன்
.. இதோஇ தோநான் புறப்பட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்

Saturday, August 4, 2012

துளித் துளி - மனிதன்

துளித் துளி - மனிதன்
 
அரை குறைப் பிண்டம்
அவசரப் பண்டம்
 
ஒன்றரை மிருகம்
தின்(று)அறை பெருகும்
 
சிந்தனைச் செம்மல்
நிந்தனை விம்மல்
 
வெறிகளால் விலங்கு
நரிகளாய் நலங்கு
 
உல்லாச உள்ளாம்
சல்லாபக் கள்ளம்
 
உத்தம வேடம்
மொத்தமும் மூடம்
 
ஆளாருக் கடிமை
பாழாகும் படிமெய்
 
அரசியற் கலைவன் - பணம்
வரைசெயல் தலைவன்
 
முகத்துதி முனைவன்
புகழ்த்துதி புனைவன்
 
சந்தர்ப்பச் சாதி
வந்தற்ப வாதி
 
சுவருக்குள் புனிதன்
தவறுக்குள் மனிதன்
 
சுயநலச் சித்தன்
அயல்நல எத்தன்
 
கனாக்களில் நோய்பவன்
வினாக்களில் தோய்பவன்
 
தப்புகள் புரிபவன்
தப்பிக்கச் சரிபவன்
 
தப்புகள் சேர்ப்பவன் - பின்
தப்பிக்கப் பார்ப்பவன்
 
பிழைகள் புரிந்தவன் - பின்
பிழைக்கத் தெரிந்தவன்
 
அகப்பட வாய் அற்றவன்
சுகப்படவாய் உற்றவன்
 
பிழைப்பின்மேல் நாட்டம்
பிழைகள் மேல் ஓட்டம்
 
கொள்கையில் குழப்பம்
உள்கையில் இளப்பம்
 
சங்கற்பத் தலைவன்
சந்தர்ப்பப் புலவன்
 
வாய்ப்புக் கடிமை
ஏய்ப்புக் குடி, மெய்
 
நடப்பால் மனிதன்
நடிப்பால் புனிதன்
 
நாள்தொறும் நாடகம்
ஆள் தொறும் பூடகம்

Friday, August 3, 2012

துளித் துளி - உறவு

துளித் துளி - உறவு
 
விரிதலும் ஒருபால் - உடன்
விரிசலும் மறுபால்
 
காசுக்குக் காகம் - பணம்
பேசக்கொள் மோகம்
 
ஒருகணம் அன்பர்
மறுகணம் வம்பர்
 
ஒட்டும் உலகம் - பகை
வெட்ட விலகும்
 
காசுக்குக் கரையும் - பண
ஓசிக்கு விரையும்
 
ஒட்டுவதை ஒட்டும்
வெட்டுவதை வெட்டும்
 
நடிப்புக்கு நாட்களம் - மன
வெடிப்புக்கு வேர்க்களம்
 
பந்தத்தால் பாசம் - வரும்
சொந்தத்தால் மோசம்
 
பணத்தால் பழிக்கும் - எதிர்
குணத்தால் கொழிக்கும்
 
சந்தர்ப்பம் சறுக்கும் - அதை
வந்தற்பம் முறுக்கும்
 
தொல்லைமேல் தொடரும் - ஓர்
எல்லைமேல் இடரும்
 
பாசமேற்பட்டும் - ஆ
வேசமே ஆட்டும்
 
காரியம் படுவது - கால்
வாரியும் விடுவது
 
சோற்றுக்குச் சொந்தம் - கைம்
மாற்றுக்கு முந்தும்
 
விருந்தென வந்தும் - கள்ளப்
பருந்தெனக் குந்தும்
 
பரிவினைப் பகட்டும் - உட்
பிரிவினை புகட்டும்

Thursday, August 2, 2012

துளித் துளி - பொன்மொழிகள்

துளித் துளி - பொன்மொழிகள்
 
பொன்மொழி எதற்கு?
பின்மொழி வதற்கு!
 
மேற்கொள அல்ல
மேற்கோள் சொல்ல
 
எடுத்தே புகலவும்
அடுத்தே அகலவும்
 
உரையில் தொடுவது - நடை
முறையில் விடுவது
 
வாயில் வழங்கலாம் - வழி
தோய விழுங்கலாம்
 
வழிபடக் கூறு
வெளிப்பட வேறு
 
நடத்தைக் கல்ல
நழுவ மெல்ல
 
சந்தர்ப்பத் தழுவல்
சமயத்தில் நழுவல்
 
எனைத்தானும் கேட்க
அனைத்தானும் ஏய்க்க
 
கேள்விமேல் கேள்வி
வாழ்வின் மேல் தோல்வி
 
மதிமேல் பூனை
பதில்மேல் பானை
 
கேட்டார்க் கெதிர்தான்! - சொல்ல
மாட்டார் பதில்தான்
 
அர்த்தங்கள் எண்ண
குதர்த்தங்கள் பண்ண
 
தர்க்கங்கள் தழைக்க
குதர்க்கங்கள் பிழைக்க
 
வேதங்கள் ஓத - வெறும்
வாதங்கள் மோத
 
வழிபடப் பேர்தான்
வழிப்பட யார்தான்?

Wednesday, August 1, 2012

துளித் துளி - முகத்துதி

துளித் துளி - முகத்துதி
 
வாய்ப்புகள் யார்க்கு? - வெகு
வாய்ப்புகழ் வோர்க்கு!
 
தாக்கினால் தாழ்வு - துதி
வாக்கினால் வாழ்வு
 
துதிக்கத் தொடங்கு - பலர்
மதிக்கும் மடங்கு
 
தாங்கத் தாங்க - புகழ்
ஓங்கும் ஓங்கும்
 
முகத்துதி முன்னால்
அகத்துதி பின்னால்
 
துதிசெயத் துதிசெயப் - பல
அதிசயம் அதுசெயும்
 
யாவுக்கும் இன்னுரை - அது
வாழ்வுக்கும் முன்னுரை
 
அள்ளிவிடும் துதி - செயல்
கொள்ளப்படும் மதி
 
அருச்சனைத் திரையில் - பல
பிரச்சனை மறையும்
 
முகத்துக்குச் சொற்கள் - புற
முதுகுக்குக் கற்கள்
 
வாயடிக்கே வாய்க்கும்
காயடிக்கே காய்க்கும்
 
ஆதிக்கம் மேவினும் - துதி
சாதிக்கும் யாவினும்
 
இதழில் கனிரசம்
இதயம் துளிவிஷம்
 
உதட்டில் சொல்வரும்
உள்ளே கல்மிஷம்
 
முகத்துக்கு முன் துதி - நெஞ்சே
அகத்துக்குப் பின் துதி