Sunday, September 30, 2012

உயிர்ப்பு!

உயிர்ப்பு!
 
மூலத்தின் ஓரத்தில்
முளைவிட்ட வித்தொன்று
காலத்தின் ஓரத்தில்
கனல்மூட்டப் பிறக்கிறது
 
உதயத்தின் ஓரத்தில்
உயிர்த்திட்ட மூச்சொன்று
இதயத்தின் ஓரத்தில்
எனைஎட்டிப் பார்க்கிறது
 
தொடக்கத்தின் ஓரத்தில்
துளிர்விட்ட வினைஒன்று
அடக்கத்தின் ஓரத்தில்
அப்பாலும் விரிகிறது
 
புழுக்கத்தின் ஓரத்தில்
பொரிந்திட்ட குஞ்சொன்று
ஒழுக்கத்தின் ஓரத்தில்
உறவுக்கே தவிக்கிறது
 
நெஞ்சுக்குள் ஓரத்தில்
நிழலிட்ட கனவொன்று
பிஞ்சுக்குள் ஓரத்தில்
பிரமிப்பாய் வளர்கிறது

Saturday, September 29, 2012

சுமைகள்

சுமைகள்
 
மூளைச் சுமைகள் மூடம் ஏறின
முதுமைச் சுமைகள் பாடம் கூறின
தோளின் சுமைகள் பொறுப்பு கூட்டின
தொல்லைச் சுமைகள் வெறுப்பு நீட்டின
 
வயிற்றுச் சுமைகள் வாழ்வை ஒடுக்கின
வாழ்வுச் சுமைகள் தாழ்வை அடுக்கின
முயற்சிச் சுமைகள் முன்னே அழைத்தன
முடியாச் சுமைகள் பின்னெ இழுத்தன
 
இதயச் சுமைகள் எண்ணம் இடித்தன
இமையின் சுமைகள் கண்ணீர் வடித்தன
விதியின் சுமைகள் விம்மி வெடித்தன
விளைவோ? சுமைகள் கும்மி அடித்தன!

Friday, September 28, 2012

ஒற்றையடிப் பாதை

ஒற்றையடிப் பாதை
 
ஒற்றையடிப் பாதை - அது
ஊர்க்குநடைபாதை
- ஒற்றையடிப் பாதை
 
சுற்றிஓடும் வாழ்க்கை - ஒன்றும்
தொட்டுச் செல்லா தென்றே
கற்றுத்தரும் பாதை - திசை
காணஒண்ணாப் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
கைகளுக்கே எட்டா - மனக்
கனவுகளும் விட்டுப்
பொய்களுக்கே அப்பால் - ஓடிப்
போம் அனைய பாதை
- ஒற்றையடிப் பாதை
 
விலைமகளிர் காட்டும் - வஞ்ச
வித்தையெலாம் போலத்
தலைமறைவில் வானம் - தொட்டுத்
தழுவி நிற்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
நீண்டமலை நாகம் - ஒரு
நெடுங்கிடையாய் மண்ணில்
பூண்டசைவும் இன்றித் - துயில்
போவதொத்த பாதை
- ஒற்றையடிப் பாதை
 
விட்டகுறி அம்பின் - ஒரே
விசைத்தடத்தைப் போல
எட்டும்வரை கண்கள் - தொட
எதிரிருக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
மடல்விரிந்த ஓலைத் - தென்னை
மட்டைத் தண்டு போல
படல்விரிந்த காட்டில் - தனிப்
படவருந்தும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
சோகநெடும் பாட்டில் - இசைச்
சுருதிஒன்று போல
வேகநெடு மேட்டில் - உயிர்
வேட்கைவிம்மும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
ஏழைவிடும் மூச்சில் - பெரும்
ஏக்கம் உண்டு போலச்
சூழவெறும் காட்டில் - மனச்
சுதிஒலிக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
துயர்ச்சுமைகள் தாங்கி - நடை
தொய்பவனைப் போல
முயற்சி இன்றி ஏங்கிப் - பின்னும்
மூச்சிழந்த பாதை
- ஒற்றையடிப் பாதை
 
பற்றனைத்தும் விட்டோன் - எங்கும்
பயணம் செய்தல் போல
பெற்றநடை நீளும் - கொள்கை
பிடிபடாத பாதை
- ஒற்றையடிப் பாதை
 
வானவிற் பல்லக்கு - கொண்ட
வரிசைபோதல் போலத்
தானசைந்தே பெண்கள் - குடம்
தாங்கிச் செல்லும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
கோதைகுழல் மீது மின்னும்
கூர்வகிடு போலக்
காதைநெடும் காதை - எனக்
காவியம் செய்காதை
- ஒற்றையடிப் பாதை
 
வரவுசெலவாக - யுகம்
வளர்கதையே நீண்டு
நிரவும் வரலாறாம் - என
நிச்சயிக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
கண்ணிழந்தோர் கையை - மெல்லக்
காதலோடும் பற்றி
நண்ணும்வழி செல்லும் - உண்மை
நண்பரொத்த பாதை
- ஒற்றையடிப் பாதை
 
நம்பிக்கையில் ஊக்கம் ஒரே
நாட்டமுற்றோ போல
அன்புக்கையை நீட்டி - நமை
அரவணைக்கும் பாதை
- ஒற்றையடிப் பாதை
 
புல்லின்முடி எல்லாம் - வைரப்
பொட்டுருண்டே நழுவும்
வல்லியர்மென் பாதம் - ஆம்;அவ்
வான்பனிநீர் கழுவும்
- ஒற்றையடிப் பாதை
 
ஒற்றையடிப் பாதை - இது
ஊருக்கொரே பாதை
நெற்றிநெடும் காட்டில் - இது
நீண்ட நீண்ட பாதை
- ஒற்றையடிப் பாதை

Wednesday, September 26, 2012

வகிடு

வகிடு
 
மேகத்தின் வகிடு
.. மின்னல் இழைத்தது - தென்னை
மீதினில் வகிடு
.. தென்றல் வளைத்தது
 
கடல்நீரில் வகிடு
.. கப்பல் கிழித்தது - இரு
கன்னத்தில் வகிடோ
.. உப்பு துளிர்த்தது
 
வயல்களின் வகிடு
.. வரப்பு கிடந்தது - நில
வறட்சியின் வகிடு
.. வெடிப்பு தொடர்ந்தது
 
கொல்லைமேல் வகிடு
.. குறும்பனி தத்தது - புற்றுக்
கூட்டமேல் வகிடு
.. எறும்(பு)அணி மொய்த்தது
 
பட்டண வகிடு
.. பாதை இட்டது - அந்தப்
பாதைமேல் வகிடு
.. வானம் தொட்டது
 
ஆறுமேல் வகிடு
.. அணைகள் எடுத்தது - மங்கை
ஆசைமேல் வகிடு
.. குடும்பம் தடுத்தது
 
குடும்பத்தின் வகிடு
.. கூட்டு பிரிவது - கட்சிக்
கூட்டணி வகிடு
.. கொள்கை முறிவது
 
ஏழைமேல் வகிடு
.. எலும்பு தெரிவது - பச்சை
இலைகள்மேல் வகிடு
.. நரம்பு சொரிவது
 
நெற்றிக்கு வகிடு
.. நேர்க்கோ(டு) எடுத்தது - இமை
நேர்விழி வகிடு
.. பார்வை தொடுத்தது
 
முகத்துக்கு வகிடு
.. மூக்கெடுப் புண்டது - புற
முதுகுக்கு வகிடு
.. நேர்நடுத்தண்டது
 
கவிதையின் வகிடு
.. காய்சீர் பிரிப்பது - சுர
கானத்தின் வகிடு
.. தாளம் பொறித்தது
 
தேவைக்கு வகிடு
.. திட்டம் வகுப்பது - நீதித்
தெளிவுக்கு வகிடு
.. சட்டம் தொகுப்பது
 
செல்வமேல் வகிடு
.. சீர்ப்பங்கிடுவது - கொண்ட
செழிப்புமேல் வகிடு
.. ஊர்ப்பங்கிடுவது
 
வாழ்க்கையின் வகிடு
.. பிறப்பிறப் பானது - ஆம்
வரலாற்றின் வகிடோ
.. திருப்பங்கள் ஏனது?

Tuesday, September 25, 2012

புதுப்பாப்பா!

புதுப்பாப்பா!
 
பாப்பா ஒண்ணு எங்க வீட்டில்
.. முளைச்சி ருக்குது - அது
படுத்துகிட்டே என்னைப் பார்த்துப்
.. பார்த்துச் சிரிக்குது
 
கேட்பார் இல்லை; தரையில் எம்பிக்
.. காலை உதைக்குது - அதன்
கிட்டப் போனால் பட்டுக் காலால்
.. எட்டி மிதிக்குது
 
அம்மா கிட்டப் போகக் கையை
.. ஆட்டி அழைக்குது - அவள்
அந்தப் பக்கம் மறைஞ்சு போனால்
.. வாயைப் பிளக்குது
 
சும்மா சும்மா பாலுக்காகச்
.. சுத்தி அழுவுது - என்ன
சூழ்ச்சிகள்தான் பண்ணினாலும்
.. சுத்தித் தழுவுது
 
பல்லுகூட முளைக்கலே; தின்
.. பண்டம் கேட்குது - அப்பா
பால் முகத்தைக் கிள்ளிக் கிள்ளிப்
.. பதமே பார்க்குது
 
தொல்லை நித்தம் கொடாமல் தூங்க
.. மாட்டேன் என்குது - போட்ட
தொட்டிலிலும் எட்டிப் பார்த்தே
.. தலைகீழ் தொங்குது
 
தத்துப் பித்துன்னு சுத்திச் சுத்தித்
.. தானே உளறுது - ஒரு
தண்ணி மழையைக் கண்டால் போதும்
.. மண்ணைக் கிளறுது
 
அத்தை அக்கான்னு குதிகுதிச்சே
.. ஆட்டம் போடுது - பார்த்த
அத்தனையும் வேணுமின்னே
.. நோட்டம் போடுது
 
அக்கா நோட்டைத் தூக்கி வச்சே
.. அழகு பார்க்குது - படிச்ச
அடையாளமத்தான் தாள்களையும்
.. கிழிச்சு பார்க்குது
 
சொக்காயையும் டெக்னிக் கலரு
.. ஷோவாய்ப் பண்ணுது - அடே
சுந்தர் இண்ணா அந்தர் ஒண்ணு
.. போடா எண்ணுது
 
பாப்பா புதுப் பாப்பா அதோ
.. படுத்திருக்குது - ஆசு
பத்திரிக்குப் போய் அம்மாதான்
.. வாங்கி வந்தது
 
கேட்பார் இல்லை; பாப்பா பண்ணும்
.. கேலிக் கூத்திது - இன்னும்
கேட்கக் கேட்கச் சொல்லுவேன் நான்
.. நேரம் போதாது

Monday, September 24, 2012

மழலை வாழ்த்து

மழலை வாழ்த்து
 
குறுகுறு துள்ளல்கள்நீர் - மழலைக்
கொடைதரும் வள்ளல்கள்நீர்
சுறுசுறுப்(பு) உள்ளங்கள்நீர் - ஒளிப்பூஞ்
சுடர்மழை வெள்ளங்கள் நீர்
 
ஓடைக் குமிழிகள் நீர் - நுரைக்கும்
உயிர்ப்புச் சிமிழிகள் நீர்
பாடலின் சந்தங்கள் நீர் - பிறவிப்
பரம்பரைச் சொந்தங்கள் நீர்
 
நாட்டியச் சோலைகள் நீர் - விடியும்
நவயுகச்சாலைகள் நீர்
தீட்டிய கோலங்கள் நீர் - உதவும்
தேவதைப் பாலங்கள் நீர்
 
ஆலய தீபங்கள் நீர் - கமழும்
அஞ்சலி தூபங்கள் நீர்
மாலை வரிசைகள் நீர் - இறைவன்
மகிழும் பரிசுகள் நீர்
 
சங்கீத ராகங்கள் நீர் - புதிய
சமுதாய மேகங்கள் நீர்
இங்கித நெஞ்சங்கள் நீர் - சுவர்க்க
இதயத்தின் மஞ்சங்கள் நீர்
 
சிந்துர ஜாலங்கள் நீர் - வரையாச்
சித்திர மூலங்கள் நீர்
இந்திரக் கிண்ணிகள் நீர் - கவர்ந்(து)உள்
இழுத்திடும் கண்ணிகள் நீர்
 
வானவில் வண்ணங்கள் நீர் - பதிந்த
வைரத்தோள் எண்ணங்கள் நீர்
தேனவிர் முல்லைகள் நீர் - குலுங்கும்
தெய்விகக் கொல்லைகள் நீர்
 
தங்கப்பூ பாளங்கள் நீர் - முதிர்ந்த
தந்தத்து நாளங்கள் நீர்
பொங்கற்பூ மேளங்கள் நீர் - உயிராய்ப்
பூரிக்க வாழுங்கள் நீர்
 
சந்தனச் சிற்பங்கள் நீர் - அரும்புச்
சரமணித் தெப்பங்கள் நீர்
வந்தனம் பிள்ளைகளே - உமக்(கு) என்
வாழ்த்துகள் கொள்ளைகளே!

Sunday, September 23, 2012

குழந்தைப்பூ

குழந்தைப்பூ
 
பிச்சிப்பூக் காதலில்
.. பிறைப்பூவாய் தோன்றிமுன்னம்
உச்சிப்பூ முகர்ந்துவிட
.. உயர்கின்ற நிலவுப்பூ
 
உள்ளப்பூ வேட்கையிலே
.. உறவுப்பூ கட்டவிழுந்து
கொள்ளைப்பூ வாய்க்குலுங்கிக்
.. குறும்புதிர்க்கும் மழலைப்பூ
 
பருவப்பூ வாசலிலே
.. பாசப்பூ மணம்பரப்பக்
கரு, அப்பூ வாகிஎழில்
.. கலைமணக்கும் அமுதப்பூ
 
இரவுப்பூ சேர்க்கையிலே
.. இளமைப்பூ செலவழிய
வரவுப்பூ வாய் எனது
.. வழிநடத்தும் குழந்தைப்பூ

போதாமல்

போதாமல்

ஏற்றிய தீபத்தில் எண்ணெய்போ தாதே
.. இதயத்தில் ஏற்றி விட்டாள் - அவ்
இதயம்கொள் தீபமும் எரியப்போ தாதே
.. உதயத்தில் மாற்றி விட்டாள்
ஆற்றிய தொண்டினுக்(கு) அன்புபோ தாதென்றே
.. அன்னையைக் காட்டி விட்டாள் - அவ்
அன்னைமெய் அன்பும் அடங்காமற் காததற்கே
.. கன்னியைக் கூட்டி விட்டாள்
காட்டிய புன்னகைக் காட்சியும் போதாதே
.. கண்மலர் பூத்து விட்டாள் - அக்
கண்மலர்க் காட்சியும் காணாதென் றேஎங்கும்
.. விண்மலர் கோத்துவிட்டாள்
மீட்டிய ராகமும் மேவாதென்றே கடல்
.. மேளமும் கொட்டி விட்டாள் - அம்
மெல்லிசை மேளமும் மீளாதென் றேஉயிர்
.. நாளமும் தட்டி விட்டாள்

Friday, September 21, 2012

நினைவு நிழலில்

நினைவு நிழலில்
 
சந்தனப் பொய்கையிலே - தென்றல்
.. சரசங்கள் நெய்கையிலே
வந்தநற் காதலிலே - உடன்
.. வாலிப மோதலிலே
அந்தநன்னாட்களையே - எண்ணி
.. ஆயிரம் பாக்களையே
சிந்தனைப்பண் இழைப்பேன் - சிரஞ்
. சீவியாய் விண்வளைப்பேன்
 
தேன்மழைச் சாரலிலே - பன்னீர்த்
.. தென்றலின் தூறலிலே
தான் மலர் ஆசையிலே - சொர்க்கத்
.. தவிப்புகள் பேசையிலே
நான்மகிழ் நாட்களையே - எண்ணி
.. நவநவப் பாக்களையே
வான்மணிக் கீதை செய்வேன் - புது
.. வரலாற்றுப் பாதை கொய்வேன்
 
செண்பக ஓடையிலே - துள்ளும்
.. செந்தமிழ் மேடையிலே
கண்புகும் வேட்கையிலே - விழிக்
.. காந்தங்கள் தாக்கையிலே
பண்புகொள் நாட்களையே - எண்ணிப்
.. பன்னூறு பாக்களையே
விண்புகழ் பூத்தொலிப்பேன் - காதல்
.. வெற்றிக்கே வாழ்த்தொலிப்பேன்

Thursday, September 20, 2012

வேண்டல்

வேண்டல்
 
மின்னலிலே நார் உரித்து
.. மீன்களிலே பூப்பறித்துப்
பின்னலிலே சூட்டசடைப்
.. பில்லைதா! - வெண்ணிலாப்
பில்லை மெல்லக் கிள்ளி எனக்(கு)
.. இல்லை தா!
 
கங்குலிலே சேலை நெய்து
.. கார்வில்லிலே மாலைகொய்து
திங்களிலே என்கழுத்தில்
.. சூட்டவா - அன்றி உன்
திருக்கரமே மாலை எனப்
.. பூட்டவா!
 
புல்நீரிலே பரல் இழைத்துப்
.. புலரியிலே நிரல்வளைத்து
முன்நேரிலே அட்டிகையாய்க்
.. கொண்டுவா - இல்லை உன்
மொய்த்தவிழிப் பார்வை அட்டி
.. உண்டு வா!

Wednesday, September 19, 2012

புன்னகை

புன்னகை
 
புன்னகை யோஒரு புன்னகை - என்னுள்
பொன்மண மாய் உறும் புன்னகை
தன்னை இழந்திடும் புன்னகை - வெறித்
தாபம் கிளர்ந்திடும் புன்னகை
 
மின்னலின் வீச்சிடும் புன்னகை - சுடர்
மின்சாரம் பாய்ச்சிடும் புன்னகை
கன்னல் சுவைதரும் புன்னகை - உயிர்க்
காதல் நவமுறும் புன்னகை
 
கீற்று நிலவுபோல் புன்னகை - உயிர்க்
கிளி மூக்(கு) அலகுபோல் புன்னகை
ஆற்றல் மிகுந்திடும் புன்னகை - ஊடல்
அகத்தும் புகுந்திடும் புன்னகை
 
மாம்பழத் துண்டெனும் புன்னகை - அதில்
மயக்கங்கள் உண்டெனும் புன்னகை
வீம்பெழில் துள்ளிடும் புன்னகை - பாளை
வெடிப்பனெக் கள்ளிடும் புன்னகை
 
வண்ணத்துப் பூச்சியின் புன்னகை - இள
வசந்தத்துக் காட்சியின் புன்னகை
கண்ணொத்தக் காதலின் புன்னகை - நெஞ்சம்
கனிந்தொத்த மோதலின் புன்னகை
 
ஓடைகொள் சிற்றலைப் புன்னகை - பின்னி
உறவுகள் பற்(று) அலைப் புன்னகை
சாடைக்குத் தூதுசொல் புன்னகை - ஏதோ
சாகசச் சேதிசொல் புன்னகை
 
அரும்புகொள் மொட்டெனும் புன்னகை - கள்ள
ஆசைமின்வெட்டுனும் புன்னகை
இரும்பும் உருக்கிடும் புன்னகை - வன்கல்
இதயமும் நெக்கிடும் புன்னகை
 
கனவுகள் பின்னிடும் புன்னகை - பல
கற்பனை மன்னிடும் புன்னகை
நினைவுகொள் வசியப் புன்னகை - காதல்
நெஞ்சுக்(கு) அவசியப் புன்னகை
 
மெல்ல நெளிவுறும் புன்னகை - இதழ்
மீறத் தெளிவுறும் புன்னகை
சொல்லவொண் ணாதர்மப் புன்னகை - மனம்
சொக்கவும் காமர்தம் புன்னகை
 
பாசத்தின் வார்ப்படப் புன்னகை - ஏதோ
பரிவுக்கும் மேற்படும் புன்னகை
நேசத்தின் நேசமாம் புன்னகை - என்றும்
நிலைபெறப் பேசுமாம் புன்னகை
 
நாகத்தும் ரத்தினப் புன்னகை - அதில்
நவநவ முத்தெனும் புன்னகை
ஆகத்தைச் சுண்டிடும் புன்னகை - கோடி
ஆசையும் விண்டிடும் புன்னகை

Tuesday, September 18, 2012

கவி அணங்கு

கவி அணங்கு
 
பாலில் முழுதும் பனி இரவில் - நிலா
பரவி ஒழுகும் தனிவரவில்
வாலிப வல்லிமுன் வந்தனளே - இள
வசந்தம்முன் செல்ல நடந்தனளே
 
உதயம் நீராடும் ஒளிப்பொழுதில் - இந்த
உலகம் சீராடும் துளிவிழுதில்
இதய என் வல்லி எழுந்தனளே - காதில்
ஏதேதோ சொல்லில் வளைந்தனளே
 
மஞ்சன மாலை மணிவெயிலில் - சுடர்
மரகதச் சோலை அணிவயலில்
அஞ்சன வல்லி நின்(று) ஆடினளே - எனை
ஆங்குயிர் கெல்லியும் ஓடினளே
 
காதலி அல்லள்; கவிதை அவள் - வேறும்
கற்பனை அல்லள்; யுவதி அவள்!
ஆதலின் என்னுள் அயின்றனளே - நவம்
ஆயிரம் மின்னப் பயின்றனளே!

Monday, September 17, 2012

அருட்கொடை

அருட்கொடை
 
தூளாய் உருளும் பனிப்பரலே!
துலங்க உன்னுள் நெடும்பனையும்
வாளா இருத்திக் காட்டவல்ல
வனப்பை நீயும் கற்றதெங்கே?
 
செம்மாதுளையாம் கனிச்சிமிழே!
சேர உன்னுள் மணிப்பரலும்
அம்மா வியப்போ(டு) அடுக்கிவைக்கும்
அழகை நீயும் பெற்றதெங்கே?
 
மயிலின் தோகை மணிக்குளமே!
மயங்க உன்னுள் நிறம்பலவும்
பயிலும் வண்ணம் பாய்விரிக்கும்
பாங்கை நீயும் உற்றதெங்கே?
 
தங்க ஓடைத் தகதகப்பே!
தவழ உன்னுள் சலசலப்பும்
பொங்க ஓடி புரண்டு செலும்
புதுமை நீயும் திரண்டதெங்கே?
 
பலவாம் சுளைகொள் பலாப்பழமே!
படலம் படலம் சுவை அவையும்
கொலுவாய் உனக்குள் நிலவ வரும்
குளுமை நீயும் நெய்ததெங்கே?
 
ஏழைக் கவியே உன்னிடம் ஓர்
எளிய சொல்லே உள்ளொளியால்
வாழக் கவிதை வரம்பெறல்போல்
வளமாய் இவையும் பெற்றன காண்!

Sunday, September 16, 2012

கைத்திறன்

கைத்திறன்
 
அந்தர வானவில் சிந்தூரச் சேற்றினை
.. அள்ளி இறைத்தவர் யார்? - பிறைச்
சந்திரக் கிண்ணி சரவிளக்கேற்றிச்
.. சற்றே மறைத்தவர் யார்?
 
வண்ணத்துப்பூச்சி வரிகளில் கோல
.. வகையையும் நெய்தவர் யார்? - எழில்
எண்ணற்ற பூக்களும் இந்திர வர்ணமாய்
.. இங்கிதம் பெய்தவர் யார்?
 
பன்னிற நாடாவின் பட்டென வானவில்
.. பாவும் வரிந்தவர் யார்? - அங்குப்
பொன்னிற வண்ணப் பொறிப்பொறியாய் மத்தாப்
.. பூவும் சொறிந்தவர் யார்?
 
மாமயில் தோகை மணிவிசிர் ஆட்டத்தில்
.. மாயம் இழைத்தவர் யார்? - அவை
தாம் ஒயில் ஆகும் தடத்தில் பொற்காசும்
.. தழைய விளைத்தவர் யார்?
 
ஓடைகளில்நீர் உல்லாசக் குமிழி
.. உருளவும் விட்டவர் யார்? - சிறு
காடை குருவிக் கவின்சிறகுக்குள்
.. கவிதைமூச்சிட்டவர் யார்?
 
சொற்களின் கூளத்தில் சுந்தர காவியம்
.. சொக்கப் படைப்பவர் யார்? - பசும்
புற்களின் மேல்பனிப் பொன்னொளி மந்திரப்
.. பூட்டும் உடைப்பவர் யார்?
 
மணிமணிச் செம்புள் மாதுளைக் கெம்பும்
.. மடங்கென வைத்தவர் யார்? - அவை
அணிஅணி யாவும் அடுக்கடுக்காயும்
.. அழகுறத் தைத்தவர் யார்?
 
கன்னியர் நுங்கிளம் கன்னங்கள் தோறும்
.. கவிதை குழைத்தவனே - பின்னர்
மன்னிய மாயமாய் மற்றென்ன ஐயம்?
.. மகிழ்ந்திவை விளைத்தவனே!

Thursday, September 6, 2012

விளக்கீடு

விளக்கீடு
 
பூவகலில் வண்ணமணிப்
.. பூச்சிவிளக்கேற்றுது - கண்
பாவைஅதைக் காண உடன்
.. பார்வை விளக்கேற்றுது!
 
தோரணமாய் வானவில்லும்
.. தொடர விளக்கேற்றுது - அதன்
காரணமாய் மங்கைகண்ணும்
.. கனவை விளக்கேற்றுது!
 
வனமயிலும் தோகையிலே
.. வரிசை விளக்கேற்றுது - அதை
இனமடவார் கண்ணு ஏறுந்தி
.. இன்ப விளக்கேற்றுது!
 
ஓடையில் நீர்க் குமிழியும்தான்
.. ஊடிவிளக்கேற்றுது - அதைச்
சாடையில் கண் பார்க்கவும் தான்
.. சலன விளக்கேற்றுது!

Wednesday, September 5, 2012

சிரிப்பு

சிரிப்பு
 
புல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லிக் - காலைப்
பூம்பனி வைரமாய்
.. மின்னியது!
 
நெல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - வேர்வை
நித்திலம் பொற்கதிர்
.. மன்னியது!
 
அல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - வானம்
ஆயிரம் முத்தாரம்
.. வீசியது!
 
வில்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - மேகம்
விண்ணுக்கு வர்ணங்கள்
.. பூசியது!
 
கல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - ஜீவ
காவியம் சிற்பமாய்த்
.. துள்ளியது!
 
சொல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லிக் - கவிச்
சோதியோ அண்டம்வான்
.. அள்ளியது!

Tuesday, September 4, 2012

பனிப் பரல்கள்

பனிப் பரல்கள்
 
புள்ளியாய் இறைத்த
.. பூம்பனிக் கூளங்கள்
வெள்ளியாய் நிறைத்த
.. வெண்மணிச் சோளங்கள்
 
மாப்பொடி நன்கு
.. மலர்த்திய கோலங்கள்
பூப்படிமம்கொள்
.. பொரிப்பொரி ஜாலங்கள்
 
கண்மூடித் தெளித்த
.. கண்ணாடித் தூவல்கள்
விண்மூடித் துளிர்த்த
.. வேடிக்கைச் சீவல்கள்
 
பால்நிலாச் சிட்டின்
.. பருவமென் முட்டைகள்
வேனிலாத் திட்டின்
.. விடியல் கண் மொட்டுகள்
 
இரவெலாம் சிந்தும்
.. இளநீரின் முத்துகள்
பரவலாய் முந்தும்
.. பரல்மணி வித்துகள்

Monday, September 3, 2012

வசந்த ராகம்

வசந்த ராகம்
 
பூக்களைக் கொண்டே பொழுதெலாம் தென்றலின்
.. புத்துயிர் சுவாசிக்கும் - தேன்
ஈக்களைக் கொண்டே இயலிசைநாடக
.. இங்கிதம் வாசிக்கும்
 
சலசல ஓடையில் சங்கீத வீணைகள்
.. சந்தங்களை மீட்டும் - அந்தக்
கலைகொளும் வீணைக் கமகங்களின் நிறம்
.. கந்தருவம் கூட்டும்
 
மாந்தளிர்த்தோரண மையலில் சிக்கி
.. மனம்களி வண்டாகும் - கொடிப்
பூந்தளிர் கோதிப் புனைகுயில் சிட்டுகள்
.. புண்ணியப் பண்பாடும்
 
அரும்(பு)அவிழாத பல்லாயிரம் மொட்டுகள்
.. ஆங்காங்கு கண்வெட்டும் - பனிக்
குறும்புகளாய் அங்குக் கொப்புளிக்கும் தளிர்
.. கோபுர விண்முட்டும்
 
வசந்த வருகையை வா எனச் சொல்லிமெய்
.. வாலிபம் வரவேற்கும் - துணை
இசைந்(து)அநுராக இதயங்கள் எல்லாம்
.. இணைந்து கரம்கோக்கும்

Sunday, September 2, 2012

வசந்த முத்திரை

வசந்த முத்திரை
 
வந்தனத்துடன் சந்தனத் தமிழ்
.. வாரி வாரி இறைக்கிறாள்
வண்ண வண்ணமும் கிண்ண கிண்ணமும்
.. வாங்கிப் பூவாய் நிறைக்கிறாள்
 
சிந்து சிந்தெனப் பந்து பந்தெனச்
.. செம்மாங் காயும் புடைக்கிறாள்
சிந்து நாடகம் தந்த தோ(டு)அகம்
.. ஜீவ காவியம் படைக்கிறாள்
 
முந்து முந்தெனத் தந்தனம்தன்
.. மோகப் பாடல் வடிக்கிறாள்
முல்லை கொல்லையில் மெல்ல எல்லையில்
.. மூதரும்பும் வெடிக்கிறாள்
 
இந்த விந்தையில் நம்தம் சிந்தையில்
.. ஏற்றம் காண வரிக்கிறாள்
இன்பச் சித்திரை அன்பு முத்திரை
.. ஏதும் தானாய்ப் பொறிக்கிறாள்