Wednesday, October 17, 2012

கேள்விகள்

கேள்விகள்
 
சுதந்திரம் என்பதே
.. சுயநலம் பேணவா? - இல்லை
இதந்தரும் நன்மைகள்
.. எல்லோரும் காணவா?
 
உரிமைகள் என்பதே
.. ஒருசிலர்க் கெட்டவா? - இல்லை
பெருமை எல்லோர்க்குமாய்ப்
.. பெரும்பலன் கிட்டவா?
 
கடமைகள் என்பதே
.. கண்துடைப் பாக்கவா? - இல்லை
உடைமைகள் வந்திங்கே
.. உன்னதம் பூக்கவா?
 
செல்வங்கள் என்பதே
.. சிற்சிலர் சொந்தமா? - இல்லை
பல்வகை உழைப்பினர்
.. பாட்டுக்குச் சொந்தமா?
 
தாயகம் என்பதே
.. தனித்தனிக் கூட்டமா - இல்லை
தூயகருத்தொன்றித்
.. துலங்கு நீரோட்டமா?
 
ஒருமைப்பாடென்பதே
.. உள்ளுத்ததோர் கேள்வியா - இல்லை
அருமைப் பண்பாட்டுக்கே
.. அருந்தவ வேள்வியா?
 
பாரதம் என்பதே
.. பழையதோர் வாதமா? - இல்லை
பூரதமாய் இன்று
.. புலர்ந்த சங்கீதமா?
 
மனிதர்நாம் என்பதே
.. மறந்து போகவா? - இல்லை
இனிதுயர் நல்கியும்
.. இந்தியர் ஆகவா?
 
வினாக்களைக் கேட்டுநாம்
.. வெறுமைதான் கொள்ளவா -இல்லை
கனாக்களில் மூழ்கிடாக்
.. கடமைமேல் துள்ளவா?

Friday, October 12, 2012

நம்மால்தான்

நம்மால்தான்
 
நன்றியினால் வாலாட்டும்
.. நாய்கூட பின்னொருநாள்
அன்றிதனைச் செய்யாமல்
.. அலட்சியமாய் மறந்துவிடும்!
 
காரணம் அந் நன்றிமனம்
.. கடுகளவும் கொள்ளாத
நா,ரணமாம் மனிதரெனும்
.. நாம்தானே வளர்க்கின்றோம்!
 
கரைந்துகரைந்(து) இரந்துண்ணும்
.. காகமுமே பின்னொருநாள்
மறந்து தம்முள் ஒற்றுமையை
.. மாறாகத் துறந்துவிடும்
 
ஏனென்றால் இனப்பற்றே
.. எள்ளளவும் இல்லாத
நானென்ற அகந்தையராம்
.. நாம்தானே அழைக்கின்றோம்!
 
பிறர் உதிரம் உறிஞ்சிஉண்ணும்
.. பேய்முட்டைகளும் ஓர்நாள்
வர, அதிலே தம் இனமும்
.. வாழாமல் செத்துவிடும்
 
ஏனென்றால் அவற்றினுக்கே
.. இரை,நஞ்சாய்க் குருதிகொண்டு
தான்நின்ற நாம்தானே
.. தாராளம் வழங்கிவிட்டோம்!

Monday, October 8, 2012

போலிகள்

போலிகள்
 
விளக்கினை ஏற்றிவிட்டுக் - காற்றை
.. விசிறவும் வைப்பாரோ? - உடல்
அழுக்கினைப் போக்கிவிட்டுச் - சேற்றை
.. அளையவும் துய்ப்பாரோ?
 
தேசியம் பேசுகிறார் - ஆனால்
.. திருடுகள் பண்ணுகிறார் - புகழ்ந்(து)
ஆசியும் கூறுகிறார் - ஆனால்
.. அழிவையே எண்ணுகிறார்
 
போலியும் தாம் இவர்கள் - ஏன், நெப்
.. போலியன் போல் நடிப்பார்? - காவல்
வேலியே தன் பயிரை - மேயும்
.. வித்தையும் மேல் படிப்பார்
 
என்ன மனிதர் இவர்? - ஆமாம்
.. ஏமாற்ற வல்லவர் தாம் - ஓர்நாள்
அன்னவர் வேடமெலாம் - தீரும்
.. அதுவரை நல்லவர் தாம்!

Sunday, October 7, 2012

பச்சோந்திப் பராபரங்கள்

பச்சோந்திப் பராபரங்கள்
 
கலைஎன்றும் கல்விஎன்றும்
.. காசடிக்கும் வித்தைகளை
விலைஇன்று பேசத்தான்
.. வெளிச்சங்கள் பராபரமே
 
நெறிஎன்றும் நீதிஎன்றும்
.. நியாயங்கள் சாகடிக்க
வெறி இன்று மூட்டத்தான்
.. வேடிக்கை பராபரமே
 
அறமென்றும் அன்பென்றும்
.. ஆயிரமாய் அளந்துவிட்டுப்
புறமின்று பேசத்தான்
.. பொய்வேடம் பராபரமே
 
மதமென்றும் மார்க்கமென்றும்
.. மக்களைஏ மாற்றிவிட்டு
நிதமின்று சுரண்டத்தான்
.. நியமங்கள் பராபரமே
 
வாழ்வென்றும் வளமென்றும்
.. வாய்வீரம் பேசிவிட்டுத்
தாழ்வின்று வைக்கத்தான்
.. தன்னலங்கள் பராபரமே
 
குடிஎன்றும் குலமென்றும்
.. கொக்கரிக்கப் போதைஉச்சி
முடிசென்று சுருட்டத்தான்
.. முனைப்பின்று பராபரமே
 
மனம் என்றும் சாட்சிஎன்றும்
.. மாய்மாலம் காட்டிவிட்டுத்
தினமின்று போலிகட்கே
.. திருவிழாக்கள் பராபரமே

Saturday, October 6, 2012

மனக் கணக்கு

மனக் கணக்கு
 
செலவே என்று பேதைமனம் - தினங்கள்
சென்ற தெண்ணிப் பறக்கிறது - அதுதான்
வரவே என்று வாதைமனம் - அநுப
வங்கள் ஏற்க மறுக்கிறது
 
இருளே எனக்கண்(டு) ஊமைமனம் - புதிய
எதிர்கா லத்தைப் பழிக்கிறது - அதுதான்
அருளே எனக்கண்(டு) ஆமைமனம் - ஒளியை
அறியா மல்தான் விழிக்கிறது!
 
குறையே என்று மூடமனம் - நிறைவு
கொள்ளா விதமே அலைகிறது - அதுதான்
இறையே நின்ற பீடமென - உணர
ஏலா மையால் மலைகிறது
 
பகையே என்று தாழ்வுமனம் - மனித
பலத்தை புவியை வெறுக்கிறது - அதுதான்
வகையே வாழ்வும் யாவுமெனும் - ஒருநாள்
வாரா மையால் சிரிக்கிறது

Friday, October 5, 2012

புதிர்

புதிர்
 
பலபல மயக்கம்
பலபல தயக்கம்
.. பார் இவை தாமே
.. உலகம் - அதிலும்
சிலசில இயக்கம்
சிலசில நயக்கம்
.. சேர்ந்திவை தாமே
.. கலகம்!
 
பலபல இயல்கள்
பலபல செயல்கள்
.. படைப்பவை தாமே
.. தருமம் - அதிலும்
சிலசில மயல்கள்
சிலசில புயல்கள்
.. சிரிப்பவை தாமே
.. மருமம்
 
பலபல நடிப்பு
பலபல நொடிப்புப்
.. பாத்திரம் தாமே
.. மனிதன் - அதிலும்
சிலசில துடிப்பு
சிலசில பிடிப்புச்
.. சித்திரம் தாமே
.. புனிதன்

Thursday, October 4, 2012

மனிதன்

மனிதன்
 
அழுது கொண்டே உலகம் நோக்கி
.. வருகிறான் - பின்
பழுது கண்டே கலகம் ஊக்கி
.. மறைகிறான்
 
குறி இலாதே வெறி அளந்து
.. குதிக்கிறான் - பின்
வெறியின் மீதே நெறி இழந்தும்
.. விதிர்க்கிறான்
 
ஆசை மட்டும் அமைய வீம்பில்
.. அலைகிறான் - பின்
கூசு மட்டும் குமையத் தேம்பிக்
.. குலைகிறான்
 
மனித வாழ்வின் மருமம் என்ன
.. மருமமோ? - அதன்
புனிதம் யாவும் புலம்பிப் பின்னும்
.. பொருமுமோ?

Wednesday, October 3, 2012

அந்த நாள்

அந்த நாள்
 
பருவம் என்ற மேடை முன்னே
.. பலதிரைகள் ஆடிடும்
உருவம் என்ற நிழல்கள் அங்கே
.. ஒவ்வொன்றாகக் கூடிடும்
 
இரவும் ஒன்று பகலும் ஒன்றாய்
.. எண்ணி நாள்கள் விடிந்திடும்
வரவும் ஒன்று செலவும் ஒன்றாய்
.. வாழ்வுக் கூத்து முடிந்திடும்
 
காலம் என்ற மாயனாரின்
.. கைத்திறங்கள் என்னவோ?
கோல மன்றில் சாயமிட்ட
.. கொள்கை தானும் மின்னவோ?
 
ஓலம் நின்று நாத வெள்ளம்
.. ஒடுங்கலும்தான் என்றைக்கோ?
மூலம் வென்று நாமும் மொத்தம்
.. மூலம் ஆவதன்றைக்கோ?

Tuesday, October 2, 2012

கரைமேல்

கரைமேல்
 
ஆசைக் கரைமேல் அறியாமை மோதிடும்
ஆர்வக் கரைமேல் வெறி ஆமை மோதிடும்
பாஷைக்கரைமேல் பதங்களே மோதிடும்
பரமன் கரைமேல் மதங்களே மோதிடும்
 
இதயக் கரைமேல் ஏக்கங்கள் மோதிடும்
எழுச்சிக் கரைமேல் தூக்கங்கள் மோதிடும்
உதயக் கரைமேல் உணர்வுகள் மோதிடும்
உள் உயிர்க் கரைமேல் கனவுகள் மோதிடும்
 
வரவுக் கரைமேல் செலவுகள் மோதிடும்
வானக் கரைமேல் நிலவுகள் மோதிடும்
இரவுக் கரைமேல் இளமைகள் மோதிடும்
இளமைக் கரமேல் பழமைகள் மோதிடும்
 
விதியின் கரைமேல் விருப்பங்கள் மோதிடும்
விருப்பக் கரைமேல் திருப்பங்கள் மோதிடும்
மதியின் கரைமேல் மயக்கங்கள் மோதிடும்
மயக்கக் கரைமேல் இயக்கங்கள் மோதிடும்
 
காலக் கரைமேல் கடமைகள் மோதிடும்
கடமைக் கரைமேல் மடமைகள் மோதிடும்
மூலக் கரைமேல் முடிவுகள் மோதிடும்
முடிவுக் கரைமேல் விடிவுகள் மோதிடும்
 
சாதனைக் கரைமேல் சோதனை மோதிடும்
சோதனைக் கரைமேல் வேதனை மோதிடும்
போதநற் கரைமேல் போலிகள் மோதிடும்
போலியின் கரைமேல் கேலிகள் மோதிடும்
 
ஆண்டுக் கரைமேல் ஆயுள் மோதிடும்
ஆயுள் கரைமேல் நோயும் மோதிடும்
பூண்ட செயல்மேல் பொறாமை மோதிடும்
போகட்டும் எங்குமே நிராசை மோதிடும்
 
சரித்திரக் கதைமேல் சாவுகள் மோதிடும்
சத்தியக் கரைமேல் வாழ்வுகள் மோதிடும்
அரித்திடும் கொள்கைமேல் அரசியல் மோதிடும்
அப்புறம்? அப்புறம்? வெறிசெயல் மோதிடும்!