Monday, December 3, 2012

ஸ்ரீ சக்தி உலா (36-40)

ஸ்ரீ சக்தி உலா (36-40)
 
சேலத்துள் நல்ல சிவகாமி - தில்லைச்
சிதம்பரத்துள்ளே தவகாமி
மூலத்தை வென்ற முழுமையாள் - அவள்
முன்னைக்கும் முன்னை இளமையாள் (36)
 
நங்கைநல்லூர்ச் செல்வ நாயகி - தெய்வ
நாராயணிபஞ்ச சாயகி
சிங்கம் நன்(கு) ஊர்ந்திடும் சீலினி - நாத
சிந்தாமணி ரத பாலினி (37)
 
கம்பாநதி பெறும் காமாட்சி - நம்மாங்
காட்டுப்பதிவரும் வாமாட்சி
அன்பால் கடல்நாகை அம்மைச்சி - அதன்
அரவம் ஒடுக்கிடும் கொம்மைச்சி (38)
 
சோட்டாணிக்கரை பகவதி - அவள்
சொல்லுக்கடங்கா யுகவதி
பாட்டாலும் கொல்லூர்மூ காம்பிகை - கொங்குப்
பண்ணாரி யாளும் ஏகாம்பிகை (39)
 
தூத்துக்குடிசெய் ஓங்காரிதான் - கொடுங்
களூர்க்கண்ணபுரத்து மாரிதான்
வாழ்த்தும் சிருங்கேரி வாசிதான் - எல்லை
வடபத்ர காளியின் ஆசிதான் (40)

No comments:

Post a Comment